×

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் உருண்டை வெல்லம் தயாரிப்பு பணி மும்முரம்

ஈரோடு,டிச.16:  ஈரோட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. காலிங்கராயன், கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை ஆகிய வாய்க்கால்களின் பாசனப்பகுதிகளில் கரும்பு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கரும்புகள் பெரும்பாலும் சர்க்கரை ஆலைகளுக்கு விவசாயிகள் விற்பனை செய்கிறார்கள். மேலும், விவசாயிகள் பலர் கரும்புகளில் இருந்து வெல்லம், நாட்டு சர்க்கரை உற்பத்தி செய்கிறார்கள்.

கோபி,சத்தி,அந்தியூர், பங்களாப்புதூர்,கள்ளிப்பட்டி,கவுந்தப்பாடி,முள்ளாம்பரப்பு, அறச்சலூர், மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையின்போது வெல்லத்தின் உற்பத்தியும், விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். இப்பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் கரும்புகளை ஆலை தொழிலாளர்கள் சாறு எடுத்து பெரிய கொப்பரையில் ஊற்றி நன்கு காய்ச்சுகின்றனர்.
 பின்னர் ஒரு பெரிய தட்டில் சர்க்கரை பாகு ஊற்றப்பட்டு, உலர வைக்கப்படுகிறது. இதையடுத்து பெண்கள் சிறிய துணியில் உருண்டையாக பிடித்து உருண்டை வெல்லத்தை உற்பத்தி செய்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்பட்ட உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டு சர்க்கரை மார்க்கெட்டிற்கு அனுப்பி ஏலம் மூலமும், ஒரு சிலர் நேரடியாக ஆலைகளிலேயே வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாகவும், பாசன வாய்க்கால்களில் தண்ணீர் முறையாக திறந்து விட்டதாலும் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசில் உருண்டை வெல்லமும் வழங்கப்படும். இதற்காக அதிக ஆர்டர்கள் வரும். ஆனால் நடப்பாண்டு இதுவரை ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. வியாபாரிகளும் தற்போதுதான் ஆர்டர் கொடுக்க துவங்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகையில் வெல்லம் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது. நடப்பாண்டு வெல்லம் விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விலை உயர்த்த கோரிக்கை
தமிழகத்தில் பல ஆண்டுகளாகவே உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்ட நிலையிலும், எங்களிடம் இருந்து வியாபாரிகள் அதே விலைக்குதான் வாங்குகிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு உருண்டை வெல்லத்தின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pongal ,Urundai Vellam ,
× RELATED மணப்பாறை வேப்பிலை மாரியம்மன்...